செக் ஷன் --17 நில பிரச்னை தொடர்பான வழக்குகளில் ஆஜராக சட்ட குழு நியமனம்
கூடலுார்; கூடலுார் செக் ஷன்- 17 நில பிரச்னை தொடர்பாக கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளில், மாநில அரசு சார்பில் வாதிட நான்கு பேர் கொண்ட சட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கூடலுார் செக் ஷன் -17 நிலத்தில் குடியிருக்கும் மக்கள், பட்டா வழங்க தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடந்த பல ஆண்டுகளாக, மாநில அரசு கூறி வருகிறது. 'இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சட்டபூர்வமான சிக்கல்கள் உள்ளது,' என, அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அரசு சார்பில், ஆலோசனை கூட்டம், ஜன., 27ல் சென்னையில் நடந்தது. அதில், நில பிரச்னை சிக்கல்களை தீர்ப்பதற்கான செயல் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில், நில பிரச்சனை தொடர்பாக, கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில், அரசு சார்பில் வாதிடுவதற்காக, சட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.காங்., மாநில பொது செயலாளர் கோஷி பேபி கூறுகையில், 'கூடலுார் ஜென்மம் நில பிரச்னை (செக் ஷன்- 17 ) தொடர்பாக சுப்ரீம் கோர்ட், ஐகோர்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில், அரசுக்கு ஆதரவாக ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சுப்பிரமணியன், ஐகோர்ட் வக்கீல் (வனம்) சீனிவாசன், சென்னை வக்கீல் சரவணன், ஊட்டி வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கொண்ட சட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது,' என்றார்.