மேலும் செய்திகள்
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
19-Aug-2024
அன்னுார்:குமாரபாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குமாரபாளையம், அன்பு நகரில், உள்ள விநாயகர் கோவிலில், வடக்கு முகமாக சன்னதி அமைத்தும், கருவறை கருங்கல்லினாலும் மற்றும் அர்த்தமண்டபம், முன் மண்டபம் அமைக்கப்பட்டது.இத்துடன் கோவிலில் வலது புறம் கொற்றவை, இடது புறம் முருகப்பெருமான் மற்றும் நாகருடன் கன்னிமூல கணபதியும் நிறுவப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மாலையில், திருவிளக்கு வழிபாடு நடந்தது. இரவு முதல் கால வேள்வி பூஜையும், விமான கலசம் நிறுவுதலும் நடந்தது.நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 7:45 மணிக்கு, விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
19-Aug-2024