கோடை வறட்சியில் வாடும் தேயிலை செடிகள்; பாதுகாக்க ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர்
கூடலுார்; கூடலுார் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தேயிலை செடிகளை பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.கூடலுார், பந்தலுார் பகுதியில் கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட பருவமழை பெய்தது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைத்தது. நடப்பு ஆண்டு பருவமழை தொடர்ந்து இரவில் பனி பொழிவின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.மேலும், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், சிறு விவசாய தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல், பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' மூலம், தினமும் இருமுறை தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழை ஏமாற்றி வருவதால், தேயிலை செடிகளில் மகசூல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக, 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தேயிலை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, பாதுகாத்து வந்தாலும், மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வாகும். இதனால், கோடை மழையை எதிர்பார்த்துள்ளோம்,' என்றனர்.