உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உச்சத்தில் இருந்த பூண்டு விலை திடீர் சரிவு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு

உச்சத்தில் இருந்த பூண்டு விலை திடீர் சரிவு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு

ஊட்டி, ; ஊட்டி பூண்டு விலை உச்சத்தில் இருந்த நிலையில், திடீரென சரிவு கண்டுள்ளதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ குணம்

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ள நிலையில், நீர் ஆதாரம் உள்ள, 12 சதவீதம் பரப்பளவில் மலைக் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, 750 ஏக்கர் பரப்பளவில், வெள்ளைப் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் விளையும் பூண்டுக்கு, மருத்துவ குணம், சுவை மிகுந்து காணப்படுவதால், வெளி மாநிலங்களில் அதிக கிராக்கி உள்ளது. கடந்தாண்டு இறுதி வரை, பூண்டு ஒரு கிலோவுக்கு, 500 ரூபாய் வரை அதிகபட்ச விலை கிடைத்தது.இந்த விலை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவில் பூண்டு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 20 நாட்களுக்கு முன் ஒரு கிலோவுக்கு, 400 ரூபாய் வரை விலை கிடைத்தது. தற்போது, படிப்படியாக விலை குறைந்து, 60 முதல் 100 ரூபாய் வரை மட்டும் மேட்டுப்பாளையம் மண்டிகளில் விலை கிடைத்து வருகிறது.

பெரும் இழப்பு

உற்பத்தி கணிசமாக உயர்ந்து இருந்தும், இந்த திடீர் விலை சரிவால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால், அறுவடைக்கு தோட்டங்களில் தயாரான பூண்டு அறுவடை செய்யப்பட்டு, மண்டிகளில் விற்பனை செய்ய தோட்டங்களில் தரம் பிரிக்கப்படுகிறது.விவசாயி சில்ல பாபு கூறுகையில், ''ஊட்டி பூண்டுக்கு பொதுவாக விலை இருக்கும். கடந்த ஆண்டை போலவே, விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் அதிக பரப்பளவில் நடப்பு போகத்தில் பூண்டு பயிரிட்டுள்ளனர். ஆனால், திடீரென விலை சரிந்திருப்பது கவலை அளிக்கிறது. தோட்டத்தில் பூண்டு விதைத்து, அறுவடை செய்வது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. மேலும், மண்டிகளில் கமிஷன், ஏற்று இறக்கு கூலி, லாரி வாடகை போன்ற செலவினங்கள் கூடுதலாகிறது. இந்நிலையில் தொடரும் விலை சரிவால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு அதிகரித்துள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை