மூன்றாம் மொழி கற்று கொள்வதில் தவறில்லை
ஊட்டி; புதிய கல்வி கொள்கை வலியுறுத்தும், மூன்றாம் மொழி குறித்து மக்களிடையே பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், மலை மாவட்ட மக்கள் சிலரின் கருத்து: ஷாலினி, டெய்லர், குன்னுார்
தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக பிரஞ்ச், இந்தி உட்பட பல மொழிகளை பயிற்றுவிக்கும் நிலையில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி வேண்டாம் என்பது ஏற்புடையதல்ல. பல மொழிகளை பயில்வதால், வருங்கால சந்ததியினர் வாழ்க்கை தரம் உயர வழி கிடைக்கும். ---உஷா, தையல் பயிற்சியாளர், குன்னுார்
ஆங்கில மொழி அறிவை தேடி, பெற்றோர் பலரும் தனியார் பள்ளிகளை நாடி செல்வதால், அரசு பள்ளிகளில், குறைந்து வந்தமாணவர் சேர்க்கையை, அதிகரிக்க, ஆங்கில வழி கல்வி பயிற்றுவிப்பதால், மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதில், மூன்றாவது விருப்ப மொழியையும் கொண்டு வந்தால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதுடன், பயிலும் ஏழை மாணவர்களும் சாதிக்கலாம். விஜயராகவன், அரசு கல்லுாரி மாணவர், கூடலுார்
நாம் போட்டி தேர்வுகளுக்கு படிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு எழுதும் போது மூன்றாவது ஒரு மொழி படிப்பது, தேர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். மூன்றாவது மொழி கற்று கொள்வதில் தவறில்லை. பிரகாஷ், அரசு கல்லுாரி மாணவர், கூடலுார்
பன்மொழி தன்மை கொண்ட நம் நாட்டில், கூடுதலாக ஒரு மொழி கற்று கொள்ள வாய்ப்பு கிடைப்பதை, மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். படித்து வேலை வாய்பபு தேடி செல்லும் நேரங்களில் பல மொழிகள் அறிந்தால், பெரும் பயன் ஏற்படும். பிற மொழிகளை கற்பதால் தமிழுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. --அக்ஷய், சட்ட கல்லுாரி மாணவர், கோத்தகிரி மத்திய அரசின் முன்மொழி கொள்கை வரவேற்கதக்கது. தாய்மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தை அடுத்து, எந்த மொழியாக இருப்பினும் மூன்றாவது மொழி கற்பது அத்தியாவசியமான ஒன்று. படித்த இளைஞர்கள் மற்றும் படிக்காதவர்கள் கூட, பிற மாநிலங்களில் பணிபுரிய மூன்றாவது மொழி பயனளிக்கிறது. இரு மொழி கொள்கைக்கு எதிராக மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக, மாநில அரசு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ராமகிருஷ்ணன், கராத்தே பயிற்சியாளர், குன்னுார்
தனியார் பள்ளிகளில் மூன்றாவது விருப்ப மொழி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசு பள்ளிகளிலும் மூன்றாவது மொழி பயிற்றுவிப்பது அவசியம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது, மற்றவர்களிடம் கலந்துரையாட, பல மொழிகள் தெரிய வேண்டும். அது அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ், ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக விருப்ப பாடமாக இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் கட்டாயம் மாணவ, மாணவிகள் பயின்று கொள்வது அவசியமாகிறது.