பழங்குடியினர் சமூக பொருளாதார மதிப்பீடு ஆய்வு; வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி
பந்தலுார் : பந்தலுார் அருகே கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில், சமூக பொருளாதாரம் குறித்த மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய-, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு இந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.உயர் அதிகாரிகள் வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று பழங்குடியின மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தெளிவு பெறுவதில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஒதுக்கப்படும் நிதி பெரும்பாலான பழங்குடியினருக்கு பயனில்லாமல் உள்ளது. சமூக பொருளாதார மதிப்பீடு
இந்நிலையில், தற்போது பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் சமுதாயம் குறித்த, தகவல்களை மதிப்பீடு செய்து, 'ஆன்லைன்' வாயிலாக அரசுக்கு தெரிவிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், பந்தலுாரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள, கிளன்ராக் வனப்பகுதியில் வாழும் காட்டு நாயக்கர் சமுதாய, பழங்குடியின மக்களின் சமூக பொருளாதாரம் குறித்த நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம், ஆசிரியர் பயிற்றுனர் கருணாநிதி, அம்பல மூலா உறைவிட பள்ளி ஆசிரியர் சாருஹாசன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.அதில், 'கிராமத்தில் உள்ள பழங்குடியின குடியிருப்புகள்; அங்கு வாழும் மக்களின் பெயர் விவரங்கள்; அவர்களுக்கான மருத்துவ வசதிகள் குறித்த விபரம்; மருத்துவமனைக்கு செல்வதற்கான நேரம் மற்றும் துாரம்; மொபைல் மருத்துவம், மக்களை தேடி மருத்துவம்; தேசிய குழந்தைகள் நலத்திட்டம் விபரம்; கிராமத்தில் பாம்பு கடி பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் எடுத்து கொள்வது குறித்த விபரங்கள்; போக்குவரத்து வசதி, குடிநீர் மற்றும் அவற்றை பெறும் முறைகள் குறித்து விபரங்கள்; ஆதார், ரேசன் அட்டைகள்,' என, 20 க்கும் மேற்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டது.பழங்குடியினர் கூறுகையில், 'அரசு ஊழியர்கள் அவ்வப்போது வந்து இது போன்ற தகவல்களை சேகரித்து சென்றாலும், எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த யாரும் இதுவரை முன் வராதது வேதனை அளிக்கிறது,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில்,' இந்த விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் எந்த வசதிகளும் சென்றடையாத பழங்குடியின கிராமங்களில் வளர்ச்சிக்கு அரசு நிர்வாகம் திட்டமிடும்,' என்றனர்.