உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆண்டு விழாவில் பழங்குடியின மாணவிகள் அசத்தல்

ஆண்டு விழாவில் பழங்குடியின மாணவிகள் அசத்தல்

பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியின், 9-ம் ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் கவிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் செண்பகம் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன் தலைமை வகித்து பேசுகையில், ''பள்ளி கல்வியை கைவிட்டு இடை நின்ற பழங்குடியின மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும் எனும் நோக்கில், இந்தப் பள்ளி துவங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது, 100 பழங்குடியின மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் கல்வியில் மட்டும் இன்றி விளையாட்டு, கலை விழா என அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை வெளிக்காட்டுவது பாராட்டுக்குரியதாக உள்ளது. பழங்குடியின பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, இந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதன் மூலம், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு, உயர்கல்வி பயிலவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பெற்றோர் இதனை பயன்படுத்தி, இந்த சமுதாயத்தை வளமான சமுதாயமாக மாற்ற முன் வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, கூடலுார் ரெப்கோ வங்கி முதன்மை மேலாளர் ரங்கராஜ், மனநல ஆலோசகர் சத்தியசீலன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகம், உப்பட்டி அரசு ஐ.டி.ஐ. உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார், பழங்குடியினர் சங்க தலைவர்கள் சந்திரன், அச்சுதன், பெல்லன் உள்ளிட்டோர் பேசினர்.தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கூடலுார் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பழங்குடியின மாணவியரின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் சாருஹாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை