கலைஞர் கனவு இல்லம் பெறுவதில் சிக்கல்; வார்டு உறுப்பினர்கள் திடீர் போராட்டம்
பந்தலுார்:கலைஞர் கனவு இல்ல திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பகுதிகளில் மாநில அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு வழங்குவதற்காக, 600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு கிராம சபையில் பயனாளிகள் பெயர் பட்டியல் வாசித்து அங்கீகரிக்கப்பட்டது.இதனால், தங்களுக்கு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இருந்த குடிசை வீடுகளை இடித்து பலரும் வீடு கட்டுவதற்கான அடித்தளங்களை அமைத்தனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், 'தனிநபர் பெயரில் பட்டா இல்லாவிட்டால், வீடு வழங்க இயலாது; நோட்டரி வக்கீலிடம் பெற்ற ஆவணங்களை ஏற்று கொள்ள முடியாது,' என, அறிவித்தது.இந்நிலையில், நேற்று நெலாக்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் இணைந்து, ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வார்டு உறுப்பினர் ஜோசப் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் நவ்பல் ஹாரிஸ் தலைமை வகித்தார். உறுப்பினர் அஷ்ரப் துவக்கி வைத்தார். அதில், 'ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல், பட்டா நிலங்களை நோட்டரி வக்கீலிடம் பதிவு செய்து, வழங்கப்பட்ட ஆவணங்களை, ஆய்வு செய்து பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. உறுப்பினர் அன்வர் ஷாஜி நன்றி கூறினார்.