| ADDED : ஜூலை 10, 2024 01:29 AM
பந்தலுார்:ரெப்கோ வங்கி சார்பில், தயாகம் திரும்பிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ரேப்கோ வங்கி சார்பில், பந்தலுாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கி கிளை மேலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் தலைமை வகித்து பேசியதாவது:தாயகம் திரும்பிய மக்களின் வளர்ச்சிக்காக வங்கி, லாபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குதல், ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு தேவையான உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வங்கி மூலம் வழங்கும் கடனுக்கான வட்டி தொகை குறைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி தரப்படுகிறது. தற்போது, கோவை ராமநாதபுரத்தில் அறக்கட்டளையுடன் இணைந்து, மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தேவைப்படும் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி, வழிகாட்டி இலவச தங்கும் விடுதியுடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' கருவி பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தாயகம் திரும்பிய மக்கள், ஏதேனும் சிறு ஆவணங்கள் இருந்தாலும் அதன் மூலம் வங்கியில் உறுப்பினராக சேர்ந்து திட்டங்கள் பெற்று பயனடைய முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, ரெப்கோ நுண்கடன் நிறுவனம் தலைவர் தங்கராஜ், பேரவை இயக்குனர் கிருஷ்ணகுமார், பேரவை பிரதிநிதிகள் வக்கீல் கணேசன், கிருஷ்ணபாரதி உள்ளிட்டோர் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் குறித்து பேசினர்.தொடர்ந்து, 55 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், 28 பேருக்கு மருத்துவ உதவி தொகை, 64 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.