நீலகிரி மாவட்டத்தில் உள்ள 283 நிலச்சரிவு... அபாய பகுதிகள்...! பாதுகாப்பு திட்ட பணிகள் அவசரம்
குன்னுார்; தமிழகத்தில், பேரிடர் ஏற்படும் அபாயமுள்ள இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரியில், வயநாடு மற்றும் சட்டீஷ்கர் போன்று பேரிடர் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில், 'வனங்கள் சூழ்ந்த மலை பகுதிகள், புல்வெளி, அரிய வகை தாவரங்கள், மூலிகை செடி, மரங்கள்,' என, பல்லுயிர் வாழும் சூழல் உள்ளது. ஆங்கிலேயர் காலம் முதல் தற்போதுவரை இங்கு ஏற்பட்ட வன அழிவு, கட்டுமான பணிகளால் கடந்த, 200 ஆண்டுகளில், மேற்கு தொடர்ச்சி மலையின் 'சுவாசம்' எனப்படும் இந்த உயிர்சூழல் மண்டலம் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் பிளான் சட்டம் அறிமுகம் இதனை கட்டுப்படுத்தும் வகையில், 1993ல் மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டதால், ஓரளவு கட்டுமான பகுதிகள் கட்டுக்குள் வந்தன. எனினும், அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தால் ஆங்காங்கே மலை சரிவுகளை கட்டுமானங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய விதிமீறல் காரணமாக, நீலமலை அபாய இடங்களின் பட்டியலில் மாநிலத்தின் முதல் இடத்தில் உள்ளது. 283 பேரிடர் அபாய பகுதிகள் சமீபத்தில், தேசிய அளவில் பேரிடர் பாதிப்புகள் அதிகளவில் உள்ள பகுதிகள் குறித்து, தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், உத்தரகாண்ட், ஆந்திரா, இமாச்சல், நாகாலாந்து; மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கேரளா, மகாராஷ்டிரா ஆகியவை அதிக ஆபத்து பிரிவில் உள்ளன. மேலும், தமிழகத்தில் அபாயம் உள்ள ஒரே மாவட்டமாக, நீலகிரி மலை பகுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 'மிகவும் அபாய பகுதி,68; அபாய பகுதி,89; நடுத்தர அபாய பகுதி,77; அபாயம் குறைந்த பகுதி,48,' என, மாவட்டத்தில், 283 நிலச்சரிவு அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. அபாய பகுதிகளின் பட்டியல் * ஊட்டியில் முத்தொரை, எல்க்ஹில், நொண்டிமேடு, தலையாட்டி மந்து, வேலிவியூ அண்ணா நகர், புதுமந்து, ராயல் காஸ்டில், தும்மனட்டி காந்திநகர், கக்குச்சியில் அம்பேத்கர் நகர், பாக்யா நகர், காந்திநகர், குடுமனை, குந்தாவில், பிக்கட்டி சிவசக்தி நகர், முக்கிமலை, முள்ளிகூர் எமரால்டு, தேவர் பெட்டா, பாலகொலா பரமூலா, சேரன் நகர், கீழ் குந்தா கெத்தை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. * குன்னுாரில் மேட்டுப்பாளையம் ரோடு, நஞ்சப்பா சத்திரம், வண்டிச்சோலை, கேத்தி ரயில்வே ஸ்டேஷன் பகுதி, மேல் மந்தாடா, அதிகரட்டி மணியாபுரம், ஆலாடாவேலி, அதிகரட்டி, மேலுாரில் ஆலட்டனை, தைமலை, முசாபுரி, உலிக்கல் சோல்ராக், உபதலை பெரியார் நகர், கரி மொரா ஹட்டி, சின்ன கரும்பாலம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. * கோத்தகிரியில், கொணவக்கொரை, ஓம் நகர், நெட்டக்கல், பங்கள படிகை, குமரமுடி, கடினமாலாவில் கொட்டி முக்கை, கோப்பையூர், குள்ளங்கரை, கட்டபெட்டு, ஜெகதளா, தவிட்டு மேடு, கம்பி சோலை, தொகலட்டி முதல் ஒன்னரை ரோடு, ஜக்கனாரையில் சக்தி நகர், வெள்ளரி கொம்பை, கீரக்கல், கோடநாடு நெடுகுளாவில் இந்திரா நகர், குனியட்டி, நாரகிரி, குட்டிமணி நகர், கோத்தகிரி -நீர்கண்டி கீழ் பகுதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. * கூடலுாரில், மூலக்கடை பகுதி, பெரிய சூண்டி, பந்தலுாரில் கூவசோலை, நடுவட்டம் ஆகாச பாலம், தவளை மலை மற்றும் முள்ளிகூர் குட்டிமணி நகர் மற்றும் இத்தலார் சுரேந்திர நகர், அம்பேத்கர் நகர், கூர்மியாபுரம், கோசலியட்டி, தும்ப நேரி கோம்பை, நெடுகுளா ராச பெட்டா, ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இயற்கை செல்வங்களை அழித்தது போதும்...
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறுகையில், ''நீலகிரியில் கட்டுமானங்களுக்காக, நீர் வழி தடங்கள், சதுப்பு நிலங்கள் அழிப்பு, மண் உறுதி தன்மை பாதிப்பு காரணங்களால், பருவ மழை காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. வயநாடு மற்றும் சட்டீஷ்கர் பேரிடர் நீலகிரிக்கு பாடமாக அமைந்துள்ளன. சமீபத்தில் நடத்திய ஆய்வில் இங்கு, 5,000 ஓடைகள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. இங்கு, ஆண்டிற்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவதால், வாகனங்களின் புகை மாசு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த, மலைச்சரிவுகள், நீரோடைகள், சதுப்புநிலங்கள் அழித்து கட்டுமான பணிகள் நடத்துவதற்கும், சாலை விரிவாக்கம் பெயரில் மரங்கள் வெட்டி மண் அரிப்பை அதிகரிக்க செய்து, நிலச்சரிவுக்கு வழிவகுக்கும் செயல்களை தடுக்க வேண்டும்,'' என்றார்.