சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நல வாரியத்தில் 30 ஆயிரம் உறுப்பினர்கள்! தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், 30 ஆயிரம் பேர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மாநில அரசால் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டது. அதில்,19 தொழிலாளர் நல வாரியம் செயல்படுகிறது. தற்போது, வெளி மாநிலம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிக அளவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் அதன்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பிரதிவாரம் புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது . புதன்கிழமை அரசு விடுமுறையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு அடுத்த அரசு வேலை நாட்களில் முகாம் நடக்கிறது.மேற்குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தக்க ஆவணங்களுடன் வயதிற்கான ஆவணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கிப்புத்தகம், புகைப்படம், நியமனதாரருக்கான ஏதேனும் ஒரு அடையாள ஆவணம் ஆகிய அசல் ஆவணங்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். கட்டாயம் பதிவேற்றணும்
மேலும், மாவட்டத்தில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இடம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், தொழிலாளர் நலத்துறை மூலம் உருவாக்கப்பட்ட ஐ.எஸ்.எம்., வலைதளத்தில் அந்தந்த தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தொழிலாளர்களின் விபரத்தை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறுகையில்,''அரசு உத்தரவுப்படி உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நல வாரியம் உருவாக்கப்பட்டது.அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கும் நோக்கில் பிரதி வாரம் புதன்கிழமை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் இதுவரை நல வாரியத்தில்.30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்,'' என்றார்.
பதிவு செய்வதற்கான தகுதி !
நல வாரியத்தில் சேர, 18 முதல் 60 வயது வரையிலான, தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள் சட்டம்-1982ன் படி, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தால், நல வாரியத்தில் பதிவு செய்ய தகுதியுடையவர். ஒரு உடலுழைப்பு தொழிலாளி இணைய தளம் மூலம் சம்மந்தப்பட்ட வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு இணைய தளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஆய்வு செய்து பதிவு செய்கிறார்.