உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அடையாளம் தெரியாத நபரை கொன்ற 7 பேர் கைது

அடையாளம் தெரியாத நபரை கொன்ற 7 பேர் கைது

பாலக்காடு: பாலக்காடு, வண்டித்தாவளம் அருகே அடையாளம் தெரியாதவரை அடித்து கொன்ற வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வண்டித்தாவளம் மூலத்தறை ரெகுலேட்டர் அருகே, கடந்த, 10ம் தேதி காலை, 40 வயதுள்ள அடையாளம் தெரியாத நபர் சடலமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை அறிக்கையில், உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும், தலைப்பகுதியில் ஏற்பட்ட கடும் ரத்தப்போக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் அடித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில், கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த நவீன், 24, சஞ்சய், 27, கார்த்திக், 26, பிரசாந்த், 35, கதிரேசன், 23, மணிகண்டன், 25 மற்றும் சூரியபிரகாஷ், 22, ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த, 9ம் தேதி இரவு மதுபோதையில் இருந்த இவர்கள், அடையாளம் தெரியாத நபரை சுமார் அரை கி.மீ., தூரம் துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தும், தாக்கியும் கொன்றதாக ஒப்புக்கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த பெண்களிடம், அவர் தவறாக நடந்துகொள்ள முயன்றதால், தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். இறந்தவர் பேசும் திறனற்றவர் என்பதும், கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தூர் டி.எஸ்.பி., சசிதரன் தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ