உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வெலிங்டனில் 713 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம்: கம்பீர அணிவகுப்பு அமர்க்களம்

 வெலிங்டனில் 713 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம்: கம்பீர அணிவகுப்பு அமர்க்களம்

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், 713 அக்னி வீரர்கள் 'பாசிங் அவுட்' அணிவகுப்பில் பங்கேற்று, சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர். குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 31வார கடுமையான பயிற்சியை வெற்றிகரமாக முடித்த, 6வது குழுவின், 713 அக்னி வீரர்களுக்கு, நேற்று நாகேஷ் சதுக்கத்தில், 'பாசிங் அவுட் பெரேட்' அணிவகுப்பு நடந்தது. அவர்கள், உப்பு உட்கொண்டு, பகவத் கீதை, பைபிள், குரான், தேசியகொடி மீது சத்திய பிரமாணம் எடுத்து, கம்பீர அணி வகுப்பில் பங்கேற்றனர். கல்வி, பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஒட்டுமொத்த செயல் திறன், விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய, 11 பேருக்கு பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட, மத்திய பாதுகாப்பு அமைச்சக பிராந்திய ராணுவ இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் கிரீஸ் கலியா பேசுகையில்,''மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்கிறது. இங்கு அசைக்க முடியாத விசுவாசம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்ய, அக்னி வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்டரின் பெருமைமிக்க முழக்கமான 'ஸ்வதர்மே நிதானம் ஷ்ரேயா' என்பதை கடைபிடித்து, அக்னி வீரர்கள் தன்னலமற்ற சேவை, மரியாதையுடன் தாய் நாட்டிற்கு கடமையாற்ற செல்லும் நிலையில், தங்களது மதிப்புகளை நிலை நிறுத்த வேண்டும்,'' என்றார். எம்.ஆர்.சி., கமாண்டன்ட் கிருஷ்ணேந்து தாஸ், துணை கமாண்ட் குட்டப்பா, அவினாஷ் ரானா ஆகியோர் அக்னி வீரர்களை பாராட்டினர். பேண்ட் வாத்தியத்தில், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, கொட்டும் மழையிலும் அக்னி வீரர்கள், 'ஜெய் ஹிந்த்' என்ற உரத்த ஆரவாரத்துடன் தேசப்பற்றை வெளிப்படுத்தினர். பயிற்சியை நிறைவு செய்த அக்னி வீரர்கள் நாட்டின் எல்லை பகுதிகளில், 4 ஆண்டு காலம் பணியாற்ற செல்கின்றனர். விழாவில் அக்னி வீரர்கள் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ