ஊட்டி ஏரியில் சாகசம் செய்ய முயன்று மூச்சு திணறிய இளைஞரால் பரபரப்பு அவர் உயிரை காப்பாற்றிய படகு இல்ல ஊழியர்
ஊட்டி : ஊட்டிக்கு சுற்றுலா வந்து, ஏரியில் நீச்சல் அடிக்கும் ஆர்வத்தில் சாகசம் செய்ய முயன்று, மூச்சு திணிறிய இளைஞரை, படகு இல்ல ஊழியர் காப்பாற்றினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் நேற்று முன்தினம் மதியம் படகு இல்லத்துக்கு வந்து, நீச்சல் அடிக்கும் ஆசையில் ஏரியில் குதித்து நீந்தி உள்ளார். சிறிது நேரத்தில், ஏரி நீரின் குளிர்ச்சி அவரை நீச்சல் அடிக்க முடியாத அளவுக்கு தள்ளி உள்ளது. இதனால், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மூழ்கும் நிலைக்கு சென்றார். இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் சப்தம் எழுப்பி உள்ளனர். இதனை மற்றொரு படகில் இருந்து பார்த்த படகு ஓட்டுனரான அன்சாத், உடனடியாக அவர் அருகில் சென்று, அவரை துாக்கி காப்பாற்றி உள்ளார். பின், அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தை 'வீடியோ' எடுத்த ஒருவர், நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டு, வைரல் ஆகி வருகிறது. படகு இல்ல ஊழியர்கள் கூறுகையில்,' ஏரி நீர் மிகவும் 'சில்லாகவும்' அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். இங்கு நீச்சல் அடித்தால் சில நிமிடங்களில் மூச்சு திணறல் ஏற்படும். எனவே, சுற்றுலா பயணிகள் இது போன்ற விபரீத விளையாட்டில் ஈடுபட கூடாது,' என்றனர்.