குன்னுார் புதுக்காடு கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு பெரும்பாடு! தேர்தலுக்கு மட்டும் வந்து போகும் அரசியல்வாதிகள்
கு ன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில், கோழிக்கரை, புதுக்காடு, குரும்பாடி, சின்ன குரும்பாடி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. மத்திய அரசு பழங்குடியினருக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கும் நிலையில், அதனை முறையாக செயல்படுத்த வேண்டிய, உள்ளாட்சி அமைப்புகள் கண்டும் காணாமல் உள்ளதால் தற்போதும் பல்வேறு கிராம மக்கள் ஏமாற்றம் அடைவது தொடர்கிறது. இந்நிலையில், குன்னுார் அருகே, புதுக்காடு கிராமத்தில் தற்போது, 28 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு, 2013ல் கட்டி கொடுக்கப்பட்ட சில வீடுகள் இடிந்தும், விரிசல் ஏற்பட்டும் உள்ளது. அதில், வசித்து வரும் பழங்குடியின மக்கள், மழைகாலத்தில் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 2021ல் சிலருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெயரளவிற்கு, 8 இடங்களில் சிறிய கழிப்பிடங்கள் கட்டி கொடுக்கப் பட்டும், அதனை பயன்படுத்த முடியாததால், பயனில்லாமல் உள்ளது. இவற்றில், 6 கழிப்பிடங்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இயற்கை உபாதைகளுக்கு வனப்பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால், விலங்குகளிடம் சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும், மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே பி.எஸ்.என்.எல்., இணைப்பு மட்டுமே மொபைல் போனில் கிடைக்கிறது. ஆனால், '3ஜி, 2ஜி நெட்ஒர்க்' கூட சரிவர கிடைக்காததால் பழங்குடியின மாணவ, மாணவியர் கல்விக்கு பயனில்லாமல் உள்ளது. இந்த கிராமத்திற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கலெக்டராக இருந்த இன்னசென்ட் திவ்யா அவ்வப்போது வருகை தந்து, பழங்குடியினருக்கு தொழில் முன்னேற்ற நடவடிக்கைகள், குழந்தைகளுக்கு சிறு தானிய சத்துணவுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதன்பின் கலெக்டர், அதிகாரிகள் யாரும் வருவதில்லை என்பது பழங்குடியின மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த, பர்லியார் ஊராட்சி முன்னாள் உறுப்பினர் சாந்தி கூறுகையில், ''பழங்குடியினருக்கு வாழ்வாதாரம் மேற்கொள்ள தொழில் முனைவோர் கடனுதவி கிடைப்பதில் சிரமங்கள் நீடிக்கிறது. லஞ்சம் கொடுப்பவர்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கும் அதிகாரிகள், 'இன்று போய் நாளை வா' என, பழங்குடியினரை பல நாட்கள் அலைக்கழிக்க வைக்கின்றனர். வன கிராமங்களில் குடியிருப்புகளுக்கு யானை, காட்டெருமை உள்ளிட்டவை வராமல் தடுக்க பாதுகாப்பு பணிகளை கேட்டும் செய்யவில்லை. தேன் எடுத்தல், வன மகசூல் பொருட்கள் சந்தை படுத்துதல், விற்பனை மையம் அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது. அபாய நிலையில் உள்ள வீடுகள் இடிந்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை,'' என்றார். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதியில் விரிசல் ஏற்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. சிலர் அரசு கொடுக்கும் திட்டங்களை சரிவர தொடர்வ தில்லை. அப்பகுதியில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அப்பகுதிக்கு பல்வேறு திட்டங்ளுக்காக அதிகாரிகள் சென்ற வண்ணம் உள்ளனர்,' என்றனர்.