தாவரவியல் ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் மூலிகை தோட்டம்
கூடலூர்: கூடலூர், நாடுகாணி ஜீன்பூல் தாவர மையத்தில் புதிதாக, 150 செடிகளுடன் அமைக்கப்பட்ட மூலிகை தோட்டம், தாவரவியல் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சுற்றுலா மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தங்கும் விடுதிகள், காட்சி கோபுரம், பெரணி கண்ணாடி மாளிகை, ஆரல் மீனகம், 'ஜிப் லைன்' சாகச சுற்றுலா உள்ளிட்டவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலிகை செடிகள் அதன் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மூலிகை தோட்டம் அமைத்துள்ளனர். இங்கு 150-க்கும் மேற்பட்ட மூலிகள் செடிகள் நடவு செய்யப்பட்டு அதன் பெயர், மருத்துவ பயன் குறித்த விபரங்களையும் வைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் யோகாசனம், தியானம் செய்வதற்கான மண்டபமும் அமைத்துள்ளனர். தொடர்ந்து, இங்குள்ள பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை செடிகளை கண்டறிந்து நடவு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மூலிகை தோட்டம் தாவர ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'கூடலூர் பகுதியில் இயற்கையாகவே ஏராளமான மூலிகை செடிகள் உள்ளது. இதில் பல மூலிகை செடிகளை பழங்குடியினர் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவைகள் குறித்து விவரங்கள் முழுமையாக இல்லை. இதில், பல செடிகள் அழியும் நிலையில் உள்ளது. அவைகளை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகள் மூலிகை செடிகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், இந்த மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.' என்றனர்.