உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மது பாட்டில் குவியல்! பார் போல மாறிய அரசு தேயிலை தோட்டங்களில்... பணி நேரத்தில் அவதிப்படும் தோட்ட தொழிலாளர்கள்

மது பாட்டில் குவியல்! பார் போல மாறிய அரசு தேயிலை தோட்டங்களில்... பணி நேரத்தில் அவதிப்படும் தோட்ட தொழிலாளர்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே நெல்லியாளம் 'டான்டீ' தேயிலை தோட்டம் உட்பட சில தனியார் தோட்டங்களில் குவிந்து கிடக்கும், காலி மது பாட்டில்களால், தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ தேயிலை தோட்டம் உட்பட சில தனியார் தோட்டங்களில், ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பகுதிகளில், இரவில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், தோட்டங்களுக்கு வேலி இல்லாத காரணத்தால், சில இடங்களை மது பிரியர்கள், 'பார்' போல பயன்படுத்தி வருகின்றனர்.

உடைத்து போடுவதால் சிக்கல்

ஒரு சில இடங்களில் பாட்டில்களை உடைத்து போட்டுள்ளதால், தொழிலாளர்கள் பணி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், இந்த பகுதியில், சிறிய வனவிலங்குகள், யானை போன்ற விலங்குகளும் அதிக அளவில் நடமாடி வருகின்றன. அவற்றின் காலில் பாட்டில் துண்டுகள் குத்தி பாதிப்பு ஏற்படுகிறது.இது குறித்த தகவலை அறிந்த, அரசு தேயிலை தோட்ட நிர்வாக இயக்குனர் கிருபாசங்கர், 'காலிமது பாட்டிலால் தொழிலாளர்கள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதனை முழுமையாக அகற்ற வேண்டும்,' என, அறிவுறுத்தினார்.

இரண்டு டன் பாட்டில்கள் சேகரிப்பு

தொடர்ந்து, கோட்ட மேலாளர் சிவக்குமார் மேற்பார்வையில், சரக உதவி கள நடத்துனர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து, நெல்லியாளம் 'டான்டீ' தேயிலை தோட்டத்தில், காலிமது பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதில், இரண்டு -டன் அளவுள்ள காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு, 70 பைகளில் நிரப்பப்பட்டன.கோட்ட மேலாளர் கூறுகையில்,'காலி மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், டம்ளர்கள் போன்றவற்றை வீசி எரிவதால் தொழிலாளர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற செயலில் மது பிரியர்கள் ஈடுபடக்கூடாது. மேலும், இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடுவது தெரிய வந்தால் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

புகார் தெரிவிக்க முன்வரணும்

-கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில்,''பந்தலுார், கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் -'டான்டீ' தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தோட்டங்களுக்கு வேலி இல்லாததால், பலர் தேயிலை தோட்டங்களை திறந்தவெளி 'பார்' ஆக மாற்றி விடுகின்றனர். இங்கு வீசி எறியப்படும் காலி கண்ணாடி மது பாட்டில்கள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்து சிதறி கிடப்பதால், தொழிலாளர்கள்; வனவிலங்குகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது போன்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், 'டான்டீ' மற்றும் தனியார் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் பகுதியில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மதுபிரியர்கள் குறித்து போலீஸ்; மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை