உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நெற் கதிரை சேதப்படுத்திய காட்டு யானை; நஷ்டம் ஏற்பட்டதால் கவலையில் விவசாயிகள்

நெற் கதிரை சேதப்படுத்திய காட்டு யானை; நஷ்டம் ஏற்பட்டதால் கவலையில் விவசாயிகள்

கூடலுார் ; கூடலுார் தொரப்பள்ளி குணில் பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிரை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு சரியான நேரத்தில் துவங்கிய பருவமழை, எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்தது. தொடர்ந்து, நெல் விவசாயிகள் ஆடி மாதத்தில் வயல்களில் பணிகளை மேற்கொண்டு நெல் நடவு செய்தனர். அடுத்த மாதம் நெற்கதிரை அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், தொரப்பள்ளி அருகே உள்ள குணில் பகுதியில் நாள்தோறும் இரவில் நுழையும் காட்டு யானைகள், நெற்கதிரை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம், வயல்களில் நுழைந்த காட்டு யானை நெற்கதிரை மிதித்து சேதம் செய்தது. தொடரும் சம்பவத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நெற்கதிர்கள் அறுவடைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், இரவில் வயல்களில் நுழையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினர் அவ்வப்போது வந்து யானைகளை விரட்டினாலும், நுழைவதை தடுக்க முடியவில்லை. எனவே, நெற்கதிர் அறுவடை முடியும் வரை, காட்டு யானைகள் வயலுக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காட்டு யானைகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய, இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ