சேதமடைந்த சாலையில் நாள்தோறும் விபத்து
பந்தலுார்: 'பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில், சேதமடைந்த சாலையில் தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படும் நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. பந்தலுாரில் இருந்து உப்பட்டி வழியாக, கேரள மாநிலம் வயநாடு மற்றும் தேவர் சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. 15 கி.மீ., துாரம் உள்ள பந்தலுார் முதல் முக்கட்டி வரையிலான சாலை, மிகவும் குறுகலாக உள்ளது. ஒரு கனரக வாகனம் வந்தால் அதற்கு இடம் கொடுக்க முடியாத நிலையில், எதிரே வரும் வாகனங்கள் சிரமப்படும் சூழல் தொடர்கிறது. இந்த சாலையை அகலப்படுத்தி தர இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பந்தலுார் அருகே தொண்டியாளம் என்ற இடத்தில், நீரோடையை ஒட்டிய சாலையில், பள்ளம் ஏற்பட்டு தற்போது பெரிய குழியாக மாறி உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த பகுதியில் நிலைதடுமாறி, விபத்துகளில் சிக்கி வருவது அதிகரித்து உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை இந்த பகுதியில் ஆய்வு செய்த போதும், தீர்வு ஏற்படுத்த வில்லை.எனவே, இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.