கூடுதல் விலைக்கு பால் விற்றால் நடவடிக்கை: தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் எச்சரிக்கை
குன்னுார் : குன்னுார் தொழிலாளர் நல துறையில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நுகர்வோர் பங்கேற்று பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். அதில், பால் விலையை விட கூடுதலாக வசூலிப்பது ; தகவல் இல்லாத பொருட்கள் விற்பனை செய்வது ; பொருட்களின் விலை பட்டியல் வைப்பது ; சரியான எடை அளவு; சீன பொருட்கள் விற்பனை தரமற்ற பல்புகள் விற்பனை உட்பட பல்வேறு புகார் களுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.இதற்கு பதில் அளித்து தொழிலாளர் நல துறை உதவி ஆணையாளர் சதீஷ்குமார் பேசுகையில், ''ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எடை தராசுகள் முறைப்படி முத்திரை வைக்கப்பட்டு பயன்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடைகளில் விலை பட்டியல் வைக்க அறிவுரை வழங்கப்படும். அச்சிடப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சீன பொருட்கள் குறைந்த விலை என வாங்குவதை தவிர்க்க வேண்டும். சீன பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க அறிவுரை வழங்கப்படும். அளவுகள் சரியாக உள்ளதா என்பதை பார்த்து வாங்கும் உரிமை உள்ளது எனவே அதனை உறுதிப்படுத்தி வாங்க வேண்டும், என்றார்.தொழிலாளர் துறை சார் அலுவலர் விக்ரம் ஆதித்தன் முன்னிலை வகித்தார். நுகர்வோர் சார்பில், மனோகரன், ஆல்தொரை, சிவசுப்ரமணியம் டேவிட், மகேந்திர பூபதி, பால கிருஷ்ணன், முகமது சலீம் உட்பட பலர் பங்கேற்றனர்.