நீலகிரியில் உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் நடவடிக்கை பாயும்! இடைத்தரகர்கள் விவசாயிகளை அணுகினால் தகவல் தரலாம்
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் அதிக விலைக்கு சில இடைத்தரகர்கள் மலை காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது; மோசடி நபர்கள குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தோட்டக்கலை துறை மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில், வேளாண்மை விதை பரிசோதனை நிலையம், ' விவசாயிகள் விதைப்பு பணிக்கு முன்பாக பிரதான காய்கறிகளை கட்டாயம் விதை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் பணி மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தி வருகிறது. விதைப்பு பணி துவக்கம்
விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலை காய்கறிகள், 'இங்கிலீஸ்' காய்கறிகளில் லாபம் ஈட்டும் வகையில் எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் வேளாண் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகளும் அந்தந்த வட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நடப்பாண்டில், 'கார் போகம், கடைபோகம், நீர் போகம்' என , மூன்று பருவங்களில் மலை காய்கறி விவசாயத்தை அதிகப்படுத்த விவசாயிகள் களம் இறங்கி உள்ளனர். தற்போது கோடைமழையை எதிர்பார்த்து விவசாயிகளும் ஆர்வமாக தோட்டங்களை தயார் செய்து , விதைப்பு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பல இடைத்தரகர்கள் விவசாயிகளை அணுகி தரம் குறைந்த விதைகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. விவசாயிகளை ஏமாற்றினால் நடவடிக்கை
வேளாண் விதை ஆய்வு துணை இயக்குனர் ரேவதி கூறியதாவது: மாவட்டத்தில் சாகுபடி காலங்களில் விவசாயிகள் தேவையான காய்கறி விதைகளை, விதை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே பெற்று பயிர் செய்ய வேண்டும். விதை உரிமம் பெறாமல் இடைத்தரகர்கள் யாரேனும் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று விதைகள் விற்பனை செய்தால், விதை கட்டுப்பாட்டு விதிகளின்படி குற்ற செயலாகும். இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகள் தரம் இல்லாமல் முளைப்புத்திறன் கொண்டிருக்கும். இதனை பலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இதனை தவிர்க்க, விவசாயிகள் விதை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே தேவையான காய்கறி பயிர்களின் விதைகளை வாங்க வேண்டும். விதைகள் வாங்கும் போது விற்பனை ரசீது கட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விதை சட்டங்களுக்கு முரணாக இடைத்தரகர்கள் யாரேனும் விதைகளை விற்பனை செய்தால் உடனடியாக தகவல் தர வேண்டும். அவர்கள் மீது சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, பனி காலம் குறைந்துள்ளதால், விவசாயிகள் வேளாண் விதை ஆய்வகத்தை அணுகி, மலை காய்கறிகளின் விதைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சாகுபடி செய்தால், நல்ல மகசூல் பெற்று பயன் பெற முடியும். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் இவ்வாறு அவர் கூறினார்.