உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை முறையில் காபி உற்பத்தியை மேற்கொள்ள அறிவுரை

இயற்கை முறையில் காபி உற்பத்தியை மேற்கொள்ள அறிவுரை

பந்தலுார்; 'காபி விவசாயிகள் காடுகளை அழித்து, காபி விவசாயம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும், இயற்கை முறையிலான காபி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பந்தலுார் அருகே அய்யன்கொல்லி உழவர் உற்பத்தியாளர் கூடத்தில் காபி வாரியம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வாரிய உறுப்பினர் மனோஜ் குமார் வரவேற்றார்.இணை இயக்குனர் தங்கராஜ் தலைமை வகித்து பேசியதாவது:இந்தியாவில் ஆண்டிற்கு மூணு புள்ளி, 5 லட்சம் மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யும் நிலையில், மூன்று லட்சம் டன் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.பால் கலக்காத காபி உடலுக்கு நன்மைகளை தருவதால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் காபி அருந்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பின்லாந்து நாட்டில் ஒரு தனிநபர் மாதத்திற்கு ஒரு கிலோ காபி தூளை பயன்படுத்துவது ஆய்வு தெரிய வந்தது.அத்துடன் கடந்த, 2021 ஆம் ஆண்டு முதல், 'ஐரோப்பிய ஒன்றிய காடழிப்பு ஒழுங்கு முறை,' சட்டத்தின் கீழ் காடுகளை அழித்து உற்பத்தி செய்யப்படும் காபி உள்ளிட்ட விவசாய விலை பொருட்களை ஏற்றுமதி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதித்து உள்ளது.எனவே, காபி விவசாயம் செய்யும் விவசாயிகள், தாங்கள் காடுகளையும் வனங்களையும் அழித்து காபி விவசாயம் மேற்கொள்ளவில்லை என்ற சான்றிதழை, காபி வாரியத்தில் பின்னர் பெற்றுக் கொண்டால் மட்டுமே காபி ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்ய இயலும்.மேலும், காபி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் எஸ்.சி., எஸ்.டி., காபி விவசாயிகளுக்கு, 90 சதவீத மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு, 40 சதவீத மானியத்திலும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கும் நிலையில் விண்ணப்பித்து அதனை பெற்று பயன்பெற வேண்டும்.மேலும், இயற்கை முறையில் காபி விவசாயம் மேற்கொள்வது உறுதிப்படுத்தும் வகையில், 'அங்கக சான்றிதழை'பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அதிக வருவாய் தரும், காபி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், அரசு மூலம் வழங்கும் திட்டங்களை பெற்று பயன்பெற முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.காபி வாரிய ஆராய்ச்சி துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், காபி வாரிய உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், காபி விவசாயிகள் பங்கேற்றனர். முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ