மது பாட்டில்களால் பாதிப்பு; கூடுதல் கண்காணிப்பு அவசியம்
கூடலுார் ; கூடலுார், இரும்புபாலம் அருகே கோழிக்கோடு சாலையோரம் மது பாட்டில்கள் அதிகரிப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கூடலுார் இரும்புபாலம் பகுதியில், கோழிக்கோடு சாலையை ஒட்டி பாண்டியார்-புன்னப்புழா ஆறு செல்கிறது. இப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஆறு மற்றும் சாலைக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதித்துள்ளனர். இந்நிலையில், இரவு நேரங்களில் சிலர், சாலையோர சிமென்ட் தடுப்பில் அமர்ந்து மது குடித்துவிட்டு, காலிமது பாட்டில்களை வனப்பகுதியில் வீசி செல்வதாக புகார் உள்ளது. இந்திலையில், நேற்று முன்தினம், மது குடித்துவிட்டு, காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் தடுப்பு மீது விட்டு சென்றுள்ளனர். இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'இரவில் சிலர், அவ்வப்போது சிமென்ட் தடுப்பு மீது அமர்ந்து மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.