உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பேரூராட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு: புகார் குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் : செயல் அலுவலர்

பேரூராட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு: புகார் குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் : செயல் அலுவலர்

குன்னுார்: ஜெகதளா பேரூராட்சியில், ஊழல் நடந்துள்ளதாக பேரூராட்சிகளின் இயக்குனருக்கு கவுன்சிலர்கள் புகார் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் அருகே ஜெகதளா தேர்வு நிலை பேரூராட்சியில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வை சேர்ந்த குறிப்பிட்ட கவுன்சிலர்களின் வார்டு பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக, தி.மு.க.,-அ.தி.மு.க., கவுன்சிலர்கள், பொதுமக்கள் முற்றுகை உட்பட பல போராட்டங்கள் நடத்தினர். எனினும் பயன் ஏற்படவில்லை.இந்நிலையில், பேரூராட்சிகளின் இயக்குனருக்கு, சஜீவன் உட்பட ஒன்பது கவுன்சிலர்கள் அனுப்பிய புகார் மனுவில் கூறியுள்ளதாவது:ஜெகதளாக பேரூராட்சியில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பேரூராட்சி பொதுநிதி மற்றும் எம்.எல்.ஏ., நிதிக்கான திட்ட பணிகளுக்கு, ஒப்பந்ததாரர்களிடம் முன்கூட்டியே, 'கமிஷன்' பெற்று, பணி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துள்ளது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.பேரூராட்சியில், 200 புதிய மற்றும் 300 விஸ்தரிப்பு வீடுகளுக்கு உரிய கட்டட அனுமதி இல்லாமல், வரிவிதிப்பு செய்யாமல் 'கவனிப்பின்' பேரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு வருடாந்திர வரியாக, 50 லட்சம் ரூபாய் வர வேண்டியதை தடுத்து, இழப்பு ஏற்படுத்தி, வரியாக, 5 லட்சம் ரூபாய் மட்டுமே நிர்ணயித்து நிதியிழப்பு நடந்துள்ளது.வைப்பு தொகை இல்லாமல் நுாற்றுக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதால், பேரூராட்சிக்கு ஆண்டிற்கு,3 லட்சம் ரூபாய் நிதியிழப்பு ஏற்படுகிறது. 2022ல், 15வது நிதிக்குழு திட்டத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விட்டு, ஒப்பந்ததாரருக்கு பணி ஒதுக்கீடு செய்து பூஜை போட்டும் பணியை நிறைவு செய்யவில்லை. ஆனால், முடிவுற்றதாக அறிக்கை தயாரித்து அரசிடம் தொகை பெற முயற்சி நடந்துள்ளது.முன்னாள் செயல் அலுவலருடன் கூட்டு சேர்ந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பில் பல பணிகளுக்கு குளறுபடியான பில்கள் போடப்பட்டுள்ளது. ஜெகதளா பேரூராட்சியில் நடந்துள்ள இத்தகைய ஊழல்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அரசிற்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்க உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.செயல் அலுவலர் சரவணராஜன் கூறுகையில், ''தலைவர் மற்றும் துணை தலைவரால் மக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகள் உரிய முறையில் நடக்காதது குறித்து தெரிய வந்துள்ளது. பேரூராட்சிக்கு நிதியிழப்பு நடந்துள்ளதும் உண்மைதான். இதுகுறித்த அறிக்கை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.ஜெகதளா பேரூராட்சி தலைவி பங்கஜம் கூறுகையில், '' ஊழல் மற்றும் வரி,வருவாய் இழப்பு குற்றச்சாட்டுக்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செயல் அலுவலர் மற்றும் வரிவிதிப்போரிடம் கேளுங்கள்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை