கூட்டுறவு வார நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு ரூ. 3.44 கோடி கடன்; சிறந்த சங்கங்களுக்கு கேடயம்
ஊட்டி; கூட்டுறவு வார விழாவை ஒட்டி, ஊட்டியில் நடந்த மாவட்ட விழாவில், 31 பயனாளிகளுக்கு 3.44 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் கடந்த, 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை, 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மூலம், 31 சுய உதவி குழுவினருக்கு, 3.19 கோடி ரூபாய் கடன் உதவி; கல்வி கடன் திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் கடன் உதவி; கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 4 உறுப்பினர்களுக்கு, 2.75 லட்சம் ரூபாய் கடனுதவி,' என, மொத்தம், 37 பயனாளிகளுக்கு, 3.44 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட அளவிலான சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன.சிறப்பாக செயல்பட்ட, 21 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்த, 5 விற்பனையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற,20 பணியாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற, 7 மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற, 8 பயிற்சியாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில அரசு கொறடா ராமச்சந்திரன் பங்கேற்று கடன் உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். கூடுதல் கலெக்டர் கவுசிக், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் , ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார் உட்பட பங்கேற்றனர்.