உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆசிரியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

 ஆசிரியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

பந்தலுார்: பந்தலுார் 'டியூஸ்' மெட்ரிக் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பணியாளர் சிவரஞ்சனி வரவேற்றார். பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் பேசுகையில், ''பள்ளிக்கு வரும் குழந்தைகளில் பலரும், பெற்றோர் மற்றும் சமூகத்தால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி, அவர்களின் கல்வி மற்றும் பொது இடங்களில் எந்த மாதிரியான பிரச்னைகளை சந்திக்கின்றனர் அல்லது அவர்களின் விருப்பங்கள் என்ன என்பதை கேட்டு தெரிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்,''என்றார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தவமணி பேசுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் சமீப காலங்களாக குழந்தைகள் மீதான, தாக்குதல் மற்றும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் மனதில் உள்ள பிரச்னைகளை வெளிக்கொண்டு வருவதிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பெற்றோர்களிடம் கூற முடியாத பல தகவல்களை, ஆசிரியர்களிடம் குழந்தைகள் தெரிவித்து, அதன் மூலம் அவர்களின் பிரச்னைகள் தீர்க்க ஏதுவாக அமையும்,'' என்றார். மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ருக்மணி பேசுகையில், ''குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர்கள் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால், அவர்களை மனது புண்படும்படி பேசுவது மற்றும் தொட்டு பேசுவது, அடிப்பது போன்றவற்றை தவிர்த்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், சக ஆசிரியர்களை அழைத்து தனியாக, ஆலோசனைகள் கூறி திருத்தலாம். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதில், மிக கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். சமூக நலத்துறை பணியாளர் குமார், சமுதாயத்தில் குழந்தைகள் மற்றும் வயோதிகர்களை எவ்வாறு, நடத்த வேண்டும், சமுதாயத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்களிப்பு குறித்து விளக்கி பேசினார். பந்தலுார் தாலுகாவை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை