ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை ஊராட்சி ஒன்றிய பள்ளியில், ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றார். உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவன அலுவலர் வரதராஜன், ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியதாவது: செல்ல பிராணிகளுக்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி போடுவதுடன், கருத்தடை செய்வது மிகவும் அவசியம். இந்த நடவடிக்கை காரணமாக, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். வெறி பிடித்த நாய் அதிகமாக உமிழ் நீரை வடிக்கும். மரக்கட்டை உட்பட, கண்ணில் பட்ட பொருட்கள் எல்லாம் கடிப்பதுடன், அங்கும் இங்கும் ஓடும். மனிதர்க ளையும் கடிக்கும். ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு நாய், ஏழு நாட்கள் சோர்வுடன் காணப்பட்டு, 15 நாட்களுக்குள் இறந்துவிடும். இந்த அறிகுறிகளுடன் இருக்கும் நாய்களுக்கு அருகில் செல்லக்கூடாது. நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையின் வழிகாட்டுதலுடன், உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை இந்தியா நிறுவனம் சார்பாக, தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. இதனால், நாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடுடன் உள்ளது. கடந்த, 2005 முதல், நீலகிரி மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தாக்கத்தால் மரணம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, ரேபிஸ் நோய் குறித்து, மாணவர்களுக்கு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாபு நன்றி கூறினார்.