உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பிறந்த ஊரில் தாயுடன் உலா வரும் குட்டி யானை; கண்காணிப்பில் வனத்துறையினர்

பிறந்த ஊரில் தாயுடன் உலா வரும் குட்டி யானை; கண்காணிப்பில் வனத்துறையினர்

கூடலுார்; கூடலுார் பாண்டியார் டான்டீ பகுதியில் பிறந்தது முதல், 3 ஆண்டுகளாக சுற்றியுள்ள பகுதிகளில், தாயுடன் உலா வரும் குட்டி யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூடலுார் பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டிய, ஓவேலி, குண்டம்புழா வனத்தை பூர்வீகமாக கொண்ட காட்டு யானை, தனது குட்டியான, 16 வயது மக்னா யானையுடன் உலா வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் குட்டி யானை தாயை விட்டு பிரிந்து சென்றது. தனியாக உலா வந்த தாய் யானை, 2022 ஜூலை 9ம் தேதி அதிகாலை, பால்மேடு அருகே பாண்டியார் டான்டீ, மேலாளர் குடியிருப்பு அருகே, மீண்டும் ஒரு ஆண் குட்டியை ஈன்றது. தொடர்ந்து, தன் குட்டியுடன் இரும்புபாலம் வனப்பகுதியில் முகாமிட்டது. சில மாதங் களுக்கு பின், தாய் யானை தன் குட்டியுடன் பாண்டியார் டான்டீ மற்றும் அதனை ஒட்டிய, இரும்புபாலம், புளியாம்பாறை, நாடுகாணி, வாழவயல், கோழிபாலம் சேப்பட்டி பகுதியில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. யாருக்கும் எந்த இடையூறும் செய்வ தில்லை.தற்போது, இந் த குட்டி யானைக்கு மூன்று வயது முடிந்து, நான்கு வயது துவங்கியுள்ளது. தொடர்ந்து, இதே பகுதியில், தாயுடன் உலாவரும் குட்டி யானையை வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் . கடந்த வாரம், பாண்டியார் டான்டீ, தேயிலை செடிகளுக்கு இடையே, சேற்றில் சிக்கிய குட்டியை, தாய் யானை மூன்று மணி நேரம் போராடி மீட்டு அழைத்து சென்றது. இந்த யானைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளன. வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தாலும், பலாப்பழத்தை தவிர வேறு எந்த விவசாய பயிர்களையும் இதுவரை சேதப்படுத்தியது இல்லை. மக்களும் இந்த யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி