இறகுப்பந்து விளையாட்டு போட்டி : 28 ல் தேர்வு
ஊட்டி; 'இறகு பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கலாம்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா அறிக்கை:மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில் ஒன்றில் கூடுதல் கவனம் செலுத்தினால் அப்பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டு போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பதிவு செய்ய இயலும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் இறகு பந்து விளையாட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுடைய, 12 வயது முதல் 21 வயது வரை உள்ள தலா, 20 மாணவர், மாணவிகள் என ஒரு மையத்திற்கு, 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு சிற்றுண்டி, பயிற்சி மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும்.இறகு பந்து விளையாட்டில். 12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான தேர்வு இம்மாதம், 28ம் தேதி காலை 8:00 மணி அளவில் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள எச்.ஏ.டி.பி., திறந்த வெளி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. விபரங்களுக்கு மாவட் விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.