நெடுஞ்சாலையோரம் தற்காலிக கடை தனியார் வாகனங்கள் நிறுத்த தடை
கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதியில், கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் நிறுத்த இடையூறு ஏற்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட, சமவெளி பகுதிகளில் இருந்து, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், குன்னுார் சாலையை அடுத்து, கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்வதை விரும்புகின்றனர். கோடை விழா நாட்களில், நுாற்றுக்கணக்கான வாகனங்கள், இச்சாலையை பயன்படுத்துவதால், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்நிலையில், கட்டபெட்டு பஜாரை ஒட்டி, ஊட்டி-குன்னுார் சாலையை இணைக்கும், இன்கோ சந்திப்பில் தனியார் சிலர் சாலையை ஒட்டி கடைகள் அமைத்துள்ளனர்.இதனால், தனியார் வாகனங்கள், நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், கோடை விழாதுவங்க உள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை இச்சாலையில் அதிகமாக இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், சாலையில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.