குன்னுாரில் ஆற்றோர ஆபத்தை தடுக்க இரும்பு கம்பங்களால் தடுப்பு
குன்னுார் : குன்னுார் பஸ் ஸ்டாண்டில் ஆற்றோர ஆபத்தான பகுதியில் பயணிகள் நிற்பதை தவிர்க்க, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறதுகுன்னுார் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் உள்ள கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சில கடைகள் அகற்றப்பட்ட நிலையில், ஆளும் கட்சியினர் தலையிட்டால் முழுமையாக அகற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது.சமீபத்தில் பெய்த மழையில் டீக்கடையின் ஒரு பகுதி ஆற்றில் இடிந்து விழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன.ஏற்கனவே இடிந்த டீக்கடை இருந்த இடத்தில் நகராட்சி சார்பில் நடந்த நிழற்குடை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இங்குள்ள கட்டட கழிவுகள் முழுமையாக அகற்றாமல் அதே இடத்தில் விடப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பலரும் ஆபத்தான இந்த இடத்தில் சென்று அமர்கின்றனர். இதற்கு தீர்வு காண நகராட்சி சார்பில் இரும்பு கம்பங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் தளத்தில் கூரை அமைக்கப்பட்டு வருவது பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் இந்த கூரைகள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.