அம்பேத்கர் நகரில் வீட்டில் நுழைந்த கரடி; பொருட்களை சூறையாடியதால் அச்சம்
மஞ்சூர்; மஞ்சூர் அருகே, அம்பேத்கர் நகரில் வீட்டில் நுழைந்த கரடி பொருட்களை சூறையாடி சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மஞ்சூர் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடக்காடு பகுதியில் கடைகளுக்குள் கரடி புகுந்து வந்ததால் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கரடி இதுவரை சிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு மஞ்சூரில் வீட்டிற்குள் கரடி புகுந்து உணவு பொருட்களை தேடி வீட்டை சூறையாடியது. மேலும், அங்கிருந்த ஒரு லிட்டர் எண்ணையை எடுத்து சென்று விட்டது. மஞ்சூர் அருகே அம்பேத்கர் நகரில் ஏசுபாய் வீட்டில் நுழைந்த கரடி வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடி சென்றது. மக்கள் கூறுகையில், 'கரடி ஊருக்குள் வந்திருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சமாக உள்ளது . வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். வனச்சரகர் செல்வகுமார் கூறுகையில்,'' பூட்டியிருந்த வீட்டில் ஆட்கள் இல்லாததால் கரடி வீட்டுக்குள் சென்றிருக்கிறது. ஆட்கள் இருந்திருந்தால் கரடி உள்ளே வந்திருக்காது. இருந்தாலும் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.