உபாசி வளாகத்தில் 12வது முறையாக கரடி விசிட் கூண்டிற்குள் சிக்காமல் எஸ்கேப்
குன்னுார்;குன்னுார் உபாசி வளாகத்தில், 12வது முறையாக வந்த கரடி கூண்டில் சிக்காமல் 'எஸ்கேப்' ஆகி வருகிறது. குன்னுார் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகம் (உபாசி) மற்றும் குடியிருப்பு வளாக பகுதிக்கு கரடி அடிக்கடி 'விசிட்' செய்து, யாரும் இல்லாத வீட்டு கதவுகளை உடைத்து பொருட்களை நாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, 11வது முறையாக வந்த போது, பழங்கள், எண்ணெய் போன்றவற்றை கூண்டில் வைத்து, கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 12வது முறையாக வந்த கரடி, ஒரு மணி நேரத்திற்கும் மேல் இதே பகுதிகளில் சுற்றி திரிந்தது. அங்குள்ள சிமென்ட் கற்களை பெயர்த்து, கரையான்களை உட்கொண்டது. ஆனால் அருகில் வைத்திருந்த கூண்டிற்குள் செல்லாமல், அங்கிருந்து 'எஸ்கேப்' ஆனது. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,'இரவு நேரங்களில் நடமாடும் வனவிலங்குகளை கண்காணிக்க, 5 குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகள் நடந்து வருகிறது. உணவு பொருட்களை உட்கொள்ள கூண்டுக்குள் செல்வதை சில கரடிகள் தவிர்த்து விடுகிறது. சேலாஸ் பகுதியில் வைத்த கூண்டில் ஒரு கரடி சிக்கியது. தொடர்ந்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும். இங்கு நடமாடுபவர்ளும் முன்னெச்சரியாக இருக்க வேண்டும்,' என்றனர்.