பல்லுயிர் பாதுகாப்பு சுவரொட்டி வெளியீடு; சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த சுவரொட்டி சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. பன்னாட்டு பல்லுயிர் தினத்தை ஆண்டுதோறும் மே, 22 ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் அனுசரிக்கின்றன, இதன் ஒரு பகுதியாக சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது. இதனை பூங்கா உதவி இயக்குனர் பிபீதா வெளியிட, அதனை ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க நிர்வாகி ஜனார்த்தனன், நீலகிரி மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்க உறுப்பினர் ராமதாஸ் ஆகியோர் பெற்று கொண்டனர்.கல்விமைய கள அலுவலர் குமரவேல் பேசுகையில்,''மனிதகுல பாதுகாப்பிற்கு அனைத்து உயிரினங்களும் தேவை. அவற்றை பாதுகாப்பது நமது கடமை. நடப்பாண்டின் பல்லுயிர் பாதுகாப்பு தின தலைப்பாக நீடித்த நிலைத்த மேம்பாடு என்ற தலைப்பில் சுவரொட்டி வெளியிடப்பட்டது,'' என்றார்பூங்கா மேலாளர் ரமேஷ், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய உறுப்பினர் மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர், இது தொடர்பான சுவரொட்டிகள் சுற்றுலா பயணியருக்கு வழங்கப்பட்டது.