பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்; வர்த்தக ரீதியாக வளர்த்தால் பெரும் பயன்
பந்தலுார்; தமிழக மாநில மலரான செங்காந்தள் மலர்கள், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதி வனம் மற்றும் சாலை ஓரங்களில் அதிக அளவில் பூத்து காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில் எட்டு தொகை மற்றும் குறிஞ்சி பாடல்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக செங்காந்தள் மலர்கள் உள்ளன. இவை காந்தள் மலர் மற்றும் கார்த்திகை பூ என்றும் அழைக்கப்படுகிறது. தமிழக மாநில மலராக உள்ள செங்காந்தள் பூக்கள், மலைப்பகுதியான குறிஞ்சி நிலங்களில் அதிக அளவில் காணப்படும். ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட, 'குளோரிசா சூப்பர்பா' எனும் தாவரவியல் பேர் கொண்ட செங்காந்தள் பூக்கள், கண்வலி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில், இதன் கிழங்கை மூலிகை மருந்துகளில் சேர்ப்பதற்காக வியாபார நோக்கில் வளர்த்து வருகின்றனர். கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது இந்த பூவை பயன்படுத்துவதால், 'ஓணப்பூ' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இம்மலர்கள் மலை மாவட்டமான நீலகிரியில் வனப்பகுதிகளில் வளர்ந்து வீணாக அழிந்து வருகிறது. கோடை காலங்களில் காட்டு தீ பரவுவதால் இது போன்ற அரிய இயற்கை தாவரங்கள் அழிந்து வருகின்றன. தற்போது, கூடலுார், பந்தலுார் வனப்பகுதிகளில் அழகாக பூத்து காட்சி தரும் இந்த பூக்களை, சுற்றுலா பயணிகள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து செல்கின்றனர். நீலகிரி விவசாயிகள் கூறுகையில், ' இந்த பூவை, சமவெளி பகுதிகளில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய பயிராக வளர்க்க மானியங்கள் வழங்கப்படுகிறது. மலை மாவட்டமான நீலகரியிலும் தோட்டக்கலை துறை மூலம் செங்காந்தள் வளர்க்க நடவடிக்கை எடுத்தால் பலருக்கும் வருவாய் தரும் விவசாயமாக இது மாறும்,' என்றனர்.