பொக்காபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி; தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஆய்வு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஆய்வு
கூடலுார்; மசினகுடி, பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டம் வந்துள்ள தேசிய பழங்குடியின ஆணைய உறுப்பினர் ஜதோத்து ஹுசைன் நாயக் நேற்று முன்தினம், ஊட்டியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று, பழங்குடியினருக்காக செயல்படுத்தும் திட்டங்கள், பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, முதுமலை மசினகுடி போக்காபுரத்தில் உள்ள, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வில், பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மை, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, உணவின் தரம், மாணவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். பள்ளி கட்டடத்தை சீரமைக்க அறிவுறுத்தினார். பழங்குடி மக்களை சந்தித்து, அவர்களுக்கு கிடைத்துள்ள அரசு திட்டங்கள் குறித்து, அவர்களின் தேவைகள், அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்ஜதோத்து ஹுசைன் நாயக் பேசுகையில், ''பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும். மாநிலத்தில் பழங்குடியினரின் உறைவிட பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் பழங்குடியினருக்கான நிதியை இரண்டு மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. அதில், தமிழகமும் ஒன்று,''என்றார். ஆய்வின் போது, மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் சங்கர், வனச்சரகர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.