தேயிலை விற்பனையில் ஏற்றம்; ஒரே வாரத்தில் ரூ.2.25 கோடி கூடுதல் வருமானம்
குன்னுார்; குன்னுார் தேயிலை ஏலத்தில், சராசரி விலை குறைந்த போதும், விற்பனை உயர்ந்ததால். ஒரே வாரத்தில், 2.25 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. விற்பனை மற்றும் விலையில், ஏற்றம் கண்டு வந்த தேயிலை துாள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சரிவை நோக்கி சென்றது; தற்போது விற்பனை அதிகரித்த போதும், விலை வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கிறது.குன்னுார் ஏல மையத்தில் கடந்த வெள்ளியன்று நிறைவு பெற்ற, 46வது ஏலத்தில், 24.09 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்ததில், 17.55 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 7.51 லட்சம் கிலோ வரத்து குறைந்தது. 45வது ஏலத்தை விட, 2.32 லட்சம் கிலோ விற்பனை உயர்ந்தது. சராசரி விலை கிலோவிற்கு, 131.97 ரூபாய் என இருந்தது. கிலோவிற்கு, 5 ரூபாய் வரை சரிந்தது. மொத்த வருமானம், 23.16 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 2.25 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது. விலையில் அதிகபட்ச உயர்வை சந்தித்த, 41வது ஏலத்தை ஒப்பிடுகையில், சராசரி விலை கிலோவிற்கு, 26 ரூபாய் குறைந்துள்ளது.