சாலையில் உலா வரும் எருமைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி
கூடலுார்: கூடலுார், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேலும், இச்சாலை கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், இரவு, 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்து தடை உள்ளதால், பகல் நேரங்களில், இச்சாலையில், உள்ளூர் மற்றும் வெளி மாநில வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், மார்த்தோமா நகர் முதல், தொரப்பள்ளி வரை சாலையோரங்களில் எருமைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இவைகள், அடிக்கடி சாலையை கடந்து செல்வதுடன், சாலையில் படுத்து ஓய்வெடுத்தும் வருகிறது. இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, இப்பகுதி சாலையில் எருமை மேய்ச்சலுக்கு விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.