உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் ஆறு வீடுகளை இடித்த புல்லட் யானை; இரவில் நடமாட்டத்தை கண்காணிக்க தெர்மல் கேமரா வரவழைப்பு

பந்தலுாரில் ஆறு வீடுகளை இடித்த புல்லட் யானை; இரவில் நடமாட்டத்தை கண்காணிக்க தெர்மல் கேமரா வரவழைப்பு

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில் வீடுகளை இடித்து வரும் புல்லட் யானையை விரட்ட, இரண்டு கும்கிகள்; 75 வன ஊழியர்கள் களம் இறங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆறு வீடுகளை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், 35-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை துாக்கி செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள், 35 வீடுகளை இடித்து, மனிதர்களையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து வீடுகளை இடித்து வந்த நிலையில், வனத்துறையினர் இரு கும்கி யானைகள் உதவியுடன், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்,75 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கும்கி யானைகளை பார்த்தவுடன், புல்லட் யானை புதருக்குள் பதுங்கியது. இதனால். 'யானை வேறு பகுதிக்கு சென்று விட்டது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி 'டான்டீ'- பகுதியில் ஆறு வீடுகளை இதே யானை இடித்து சேதப்படுத்தியது.

உயிர் தப்பிய நான்கு பேர்

அதில், சுமதி என்பவரின் வீட்டு கதவை உடைத்த யானை, வீட்டிற்குள் தலையை நுழைத்ததில் டி.வி., உள்ளிட்ட பொருட்கள் உடைந்தன. யானை வீட்டிற்குள் வருவதை பார்த்த சுமதி மற்றும் அவரது கணவர் ராமச்சந்திரன், மகள் பைரவி ஆகிய மூவரும் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி உயிர் தப்பினர். அதே நேரத்தில், சிவகாமி என்பவரது வீட்டையும் இடித்த போது வீட்டினுள் இருந்த அவரும் பின்பகுதி வழியாக ஓடி உயிர் தப்பியுள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதிகளை கூடுதல் உதவி தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், டான்டீ நிர்வாக இயக்குனர் கிருபாசங்கர், எம்.எல்.ஏ., ஜெயசீலன், வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று காலை, வன பணியாளர்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் யானையை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் கூறுகையில்,'புல்லட் யானையால் நாள்தோறும் நாங்கள் உறக்கம் இல்லாமல் தவித்து வருகிறோம். யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்கும் முயற்சியில் வன குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, பெங்களூருவில் இருந்து, 'தெர்மல் கேமரா' வரவழைக்கப்பட்டு உள்ளது. வனத்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 23, 2024 09:07

காரண காரியம் இல்லாம வாய்க்கு வந்தபடி பேர். புல்லட் யானை. படையப்பா யானை. கொம்பன் யானைன்னுட்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை