மாலை நேரத்தில் காலம் கடந்து வரும் பஸ்கள்
கோத்தகிரி : கோத்தகிரி - குன்னுார் இடையே குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இயக்காததால், காலம் கடந்து வந்த அரசு பஸ்சில் பயணிகள் முட்டி, மோதி பயணித்தனர்.கோத்தகிரி - குன்னுார் இடையே சமீப காலமாக குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால், முக்கிய சந்திப்புகளில் பயணிகள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், ஊட்டி-- குன்னுார் பஸ்கள் சென்றுவரும், கட்டபெட்டு சந்திப்பில் நேற்று மாலை, 50க்கும் மேற்பட்ட பயணிகள் கோத்தகிரிக்கு செல்ல பஸ்சிற்காக காத்திருந்தனர். ஒரு மணி நேரம் கடந்தும் அரசு பஸ் வரவில்லை. இதனால், அலுவலகம் செல்பவர்கள், பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த தொழிலாளர்கள், கால் கடுக்க காத்திருந்தனர்.நீண்ட நேரத்துக்கு பின், குன்னுாரில் இருந்து அதிக பயணிகளை ஏற்றி வந்த பஸ் 'இன்கோ' சந்திப்பில் நிறுத்தாமல் சென்றதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். சில நிமிடங்கள் கழித்து வந்த வேறு பஸ்சில் நீண்ட கால தாமதத்திற்க்கு இடையே பயணித்தனர்.பயணிகள் கூறுகையில், 'நாள்தோறும் மாலை, 5:00 மணி முதல், 6:30 மணிவரை, குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால், பணிகளை முடித்து வீட்டிற்கு செல்வதற்கு அதிக கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் அதிக பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து நிர்வாகம், குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.