முட்டைகோசுக்கு விலை இல்லை; அறுவடை செய்வதில் சுணக்கம்
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் முட்டைகோசுக்கு விலை இல்லாததால் அறுவடை செய்யாமல் விடப்பட்டுஉள்ளது. நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி கணிசமான பரப்பளவில் பயிரிடப்படுகிறது. நடுப்பாண்டு, முட்டைகோஸ் அதிக பரப்பளவில் பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். குறிப்பாக, கோத்திகிரி பகுதியில், கூக்கல்தொரை, கட்டபெட்டு, ஈளாடா மற்றும் நெடுகல் உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, ஒரு கிலோ முட்டைக்கோஸ், உள்ளூர் மண்டிகளில், 12 முதல், 14 ரூபாய், மேட்டுப்பாளையம் மண்டிகளில், 15 முதல், 18 ரூபாய் வரை விலை விற்கப்படுகிறது. இடுபொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு எடுத்து செல்ல லாரி வாடகை, ஏற்று இருக்கு கூலி மற்றும் மண்டி கமிஷன் போன்ற செலவினங்கள் அதிகமாக உள்ளது. இதனால், முட்டைகோஸ் அறுவடை நேரத்தில், கட்டுப்படியான விலை கிடைத்தால் மட்டும், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லாத பட்சத்தில், இழப்பை சந்திக்க நேரிடும். இந்நிலையில், தயாரான முட்டைகோஸ், அறுவடை செய்யாமல், விலை உயர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தோட்டத்திலேயே விட்டு வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.