தேவையற்ற இடத்தில் கால்வாய்: வரி பணம் வீண்
பந்தலுார், ;பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, சோலாடி பகுதியில் தேவையற்ற இடங்களில் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைப்பது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோலாடி கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியினர் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். 'இந்த பகுதியில் தெருவிளக்கு, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், செய்து தரவில்லை,' என, மக்கள் மத்தியில் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2021--22 ஆம் ஆண்டு சோலாடி பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் மண் சாலை, 27 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சோளிங் சாலையாக மாற்றப்பட்டது. 'இந்த பணியில் போதிய தரம் இல்லை; உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்த வேண்டும்,' என, பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 3- லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பை ஒட்டி இந்தப் பணி மேற்கொண்டு வரும் நிலையில், இதன் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில், கால்வாய் அமைக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட சாலையில், தேவையற்ற இடங்களில் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைத்து நிதியை விரயமாக்குகின்றனர். மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. மழை மற்றும் வெயில் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலை பகுதியில் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முன் வருவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, மக்கள் பயன் பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்,' என்றனர்.