உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொழில்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்

தொழில்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சி நிறைவு செய்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் ராஜேஷ்குமார் வரவேற்றார். பயிற்சி நிலைய முதல்வர் நவ்ஷாத் தலைமை வகித்து பேசுகையில், ''தற்போது உலகம் முழுவதும் இயந்திரமயமாதல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் முறையான பயிற்சி பெற்று, முதல் கட்டமாக தங்களுக்கு கிடைக்கும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தால், அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சிறந்த நிறுவனங்களில், பணிக்கு சேரலாம். மேலும், படிக்காத மாணவர்களுக்கு மட்டுமே அரசு தொழிற்பயிற்சி நிலையம் என்ற நிலை உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. எனவே, கிராமப்புற மாணவர்கள் எதிர்காலத்தில், சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறலாம்,'' என்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், 16 பழங்குடியின மாணவர்கள் உள்ளிட்ட 131 பேருக்கு, சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ''இந்த அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பல்வேறு தனி திறமைகளை கொண்ட பழங்குடியின மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மாணவர்களும் பயிற்சி பெறுவது பாராட்டுக்குரியது. மாறிவரும் அறிவியல் யுகத்தில், புதிய யுக்திகளை கையாண்டு தொழில் வாய்ப்புகள் மேம்பட்டு வரும் நிலையில், அதற்காக இங்கு வழங்கப்படும் பல அதி நவீன, தொழிற்பயிற்சிகளை கற்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதுடன், தொழில் முனைவோர்களாகவும் மாற வேண்டும்,''என்றார். தாசில்தார் சிராஜுநிஷா சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், ''இந்த தொழிற்பயிற்சி மையத்தில் பழங்குடியின மாணவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டறிந்து உள்ளது பாராட்டுக்குரியது. எனவே இந்தப் பகுதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்த பயிற்சி மையத்தில் சேர்ப்பதுடன், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது என்பதால் பெண்களும் பயிற்சியில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை பெற முன்வர வேண்டும்,''என்றார். தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி மெர்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ராகேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை