குன்னுாரில் பனியில் பூத்த செர்ரி பிளாசம் பூக்கள்; ஜப்பான் நாட்டின் தேசிய மலருக்கு தற்போது சீசன்
குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்காவில், ஜப்பான் நாட்டு தேசிய மலரான 'செர்ரி பிளாசம்' மலர்கள் பூத்து குலுங்குகிறது. குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஏராளமான வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டன. அதில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த 'சகுரா' என, அழைக்கப்படும் 'செர்ரி பிளாசம்' மரத்தில் மலர்கள், தற்போது பூத்து குலுங்குகிறது. பனி காலத்தில் பூக்கும் மலர்கள் அடுத்து வரும் வசந்த காலத்தை வரவேற்ற பின் உதிரும். பூங்காவில் நுாற்றுக் கணக்கான பறவை இனங்கள் உள்ள நிலையில், இந்த மலரின் வாசனையால், பல்வேறு பறவைகளை ஈர்க்கிறது. சுற்றுலா பயணிகள், இந்த மரங்களின் முன் நின்று 'போட்டோ' எடுத்து செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,''ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி பிளாசம் விளங்குகிறது. அங்கு செர்ரி பிளாசம் திருவிழா நடத்தப்படுகிறது. அதில், தயாரிக்கும் சாக்லேட் பிரபலமாக உள்ளது. வசந்த காலத்தை வரவேற்கும் இந்த மலர்கள் நீலகிரியில், பல இடங்களிலும் பூத்துள்ளன. சிம்ஸ் பூங்காவில், உள்ள மரங்களில் கடந்த, 2023ல் ஆக., முதல் டிச., வரை பூத்தது; தற்போது, 2024 டிச., பூத்த இந்த மலர்கள், பிப்., வரை சீசனாக இருக்கும்,'' என்றனர்.