காலநிலை மாற்றத்தால் வைரஸ் நோய் அபாயம்; கல்லுாரி மாணவர்களுக்கான கருத்தரங்கில் தகவல்
கோத்தகிரி; 'காலநிலை மாற்றத்தால், வைரஸ் நோய்கள் பெருமளவில் பரவும் வாய்ப்பு உள்ளது,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கோத்தகிரியில், சென்னை கொளத்துார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி கோடநாடு பகுதியில், காலநிலை மாற்றம் கருத்தரங்கு மற்றும் மரம் நடும் விழா நடந்தது. 'ஐலேண்ட் அறக்கட்டளை' இயக்குனர் அல்போன்ஸ் ராஜ் தலைமை வகித்தார். தமிழக அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது: காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உலகம் உணர தொடங்கி விட்டது. இதன் காரணமாக, தீவிரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தியாவில் வடமேற்கு பகுதிகளிலும், பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் பெய்து வரும் கனமழையும், அதனால் ஏற்பட்டுள்ள பேரிடர்களும் எச்சரிக்கை செய்வது போல் உள்ளது. காலநிலை மாற்றத்தால், வைரஸ் நோய்கள் பெருமளவில் பரவும் வாய்ப்பு உள்ளது. கேரளாவில் கடந்த, ஐந்து ஆண்டுகளில், 'நிபா வைரஸ், காக் சாக்கி வைரஸ், வெஸ்ட் நைல் வைரஸ்' போன்ற வைரஸ்களால் நோய்கள் பரவி வருகிறது. சமீபத்தில், மனித மூளையை தாக்கும் 'பி.ஏ.எம்' என்ற வைரஸ் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உருவானதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய வைரஸ் நோய்கள் கேரளாவில் பரவுவதற்கான காரணம், அங்கு ஈரநிலம் அதிகமாக உள்ளதாகும். புவி வெப்பம் காரணமாக, பனி மலைகள் உருகும் போது கடல் மட்டம், 9 மி.மீ., வரை உயரும். இதன் விளைவாக, கடற்கரையோர நகரங்கள், 9 கி.மீ., வரை கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. உலக அளவில் புவி வெப்பத்திற்கு காரணமான, பசுமை குடில் வாயுக்களை அதிகளவில் வெளியேற்றுவதில், மூன்றாவது இடத்தில் நம் நாடு உள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை பொதுமக்கள் உணர்ந்து அதனை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மகளிர் மேம்பாட்டு கூட்டமைப்பின் தலைவர் சாராள் நன்றி கூறினார்.