மலையில் அடிக்கடி பழுதடையும் கோவை - பொன்னானி அரசு பஸ்
பந்தலுார் : கோவையில் இருந்து பொன்னானி பகுதிக்கு இயக்கப்படும், அரசு பஸ் அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழகம், ஊட்டி கிளையில் இருந்து, கோவை-பொன்னானி வழித்தடத்தில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மதியம், 3:00- மணிக்கு கோவையில் புறப்படும் இந்த பஸ், இரவு, 10:00 மணிக்கு பொன்னானி வருகிறது. மீண்டும் மறுநாள் காலை, 6:55 மணிக்கு பொன்னானில் புறப்பட்டு ஊட்டி செல்கிறது.இந்த பஸ்சில் பொன்னானி மற்றும் நெல்லியாளம், உப்பட்டி, தொண்டியாளம், மேங்கோரேஞ்ச், அம்மன்காவு, அத்திக்குன்னா, வாழவயல், குந்தலாடி, பந்தலுார், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தினசரி காலையில் பயணித்து வருகின்றனர்.அதில், 'தொலை துாரங்களுக்கு செல்லும் பயணிகள், பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள்,' என, அதிக அளவில் கூட்டம் காணப்படும்.இந்நிலையில், இந்த பஸ் கடந்த சில நாட்களாக அடிக்கடி பழுதடைந்து நிற்பது வாடிக்கையாக மாறி உள்ளது. காலையில் இந்த பஸ்சில் ஏறி புறப்படும் பயணிகள், பஸ் எந்த இடத்தில் நிற்குமோ என்ற அச்சத்தில் பயணிக்கும் சூழல் தொடர்கிறது.மேலும், இரவு நேரத்தில் வரும்போது நடுவழியில் பழுதடைந்து நின்றால், பயணிகள் மட்டுமின்றி பஸ் டிரைவர் மட்டும் கண்டக்டரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இதுகுறித்து போக்குவரத்து கழக ஊட்டி கிளை நிர்வாகத்திற்கு, பயணிகள் பலமுறை புகார் கொடுத்தும் பழுதடைந்த பழைய பஸ்சை மாற்ற நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பொன்னானியில் இருந்து ஊட்டிக்கு காலையில் இயக்கப்பட்ட அரசு பஸ் கூடலுார் அருகே பால்மேடு என்ற பகுதியில் நேற்று நடுவழியில் நின்றது. பயணிகள் தவித்தனர்.பயணிகள் கூறுகையில், 'தொலைதுாரம் பயணிக்கும் இந்த பஸ்சை மாற்றி, புதிய பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.