உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அபாய பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டுமானத்துக்கு சீல்

அபாய பகுதியில் கட்டப்பட்ட விடுதி கட்டுமானத்துக்கு சீல்

மஞ்சூர்:மஞ்சூர் அருகே பேரிடர் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட எட்டு, 'உட்ஹவுஸ்' கட்டுமானங்களுக்கு, நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், தலக்காடுமட்டம் சரிவான பகுதியில் உட் ஹவுஸ் கட்டப்படுவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. பாலகொலா ஊராட்சி நிர்வாக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சரிவான பகுதியில் விதி மீறி, உட் ஹவுஸ் கட்டப்பட்டு வருவது தெரிந்து, கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான முறையற்ற கட்டடங்கள் கண்காணிப்பு குழு தலைவரான மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், உதவி சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர் அஸ்வினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர், நேற்று அப்பகுதிக்கு சென்று, எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டிய, எட்டு உட் ஹவுஸ் கட்டடங்களுக்கு, சீல் வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறுகையில், ''ஆந்திராவை சேர்ந்த தானுமேத்தா, சுனில் உட்பட, எட்டு பேரின் உட் ஹவுஸ் கட்டுமானத்துக்கு சீல் வைக்கப்பட்டது. விசாரணை முடிந்தபின், மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை