உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மார்க்கெட் கடைகளை இடித்து கட்டுவதில் சர்ச்சை! ஆற்றோர பகுதியில் மீண்டும் ஆய்வு அவசியம்

மார்க்கெட் கடைகளை இடித்து கட்டுவதில் சர்ச்சை! ஆற்றோர பகுதியில் மீண்டும் ஆய்வு அவசியம்

குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து கட்டும் விவகாரம் வியாபாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கட்டடங்களை இடித்து கட்ட நகராட்சி முடிவு செய்துள்ளது.குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 724 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இடித்து புதிய கட்டுமான பணிகளுக்கு, மாநில அரசு, 41.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 4 கட்டங்களாக கடைகளை இடித்து, 'பார்க்கிங் வசதியுடன், 678 கடைகளை மட்டுமே கட்ட முடிவு செய்துள்ளது.

தற்காலிக கடைகளுக்கு இடம் எங்கே?

அதில், இடிக்கப்படும் மார்க்கெட் கடைகளுக்கு பதில் எந்த இடத்தில் தற்காலிக கடைகளை கட்டுவது என்பது குறித்த குழப்பம் தொடர்கிறது. சமீபத்தில், இப்பகுதியில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, தியேட்டர் வளாகத்தை இடித்து சமன் செய்த இடத்தில் தற்காலிக கடை அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தந்தி மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் இடத்தை பாதுகாக்க, இந்து முன்னணி சார்பில், அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், குழப்பம் நீடிக்கிறது.

வியாபாரிகள் சங்கம் மனு

இந்நிலையில், 'மார்க்கெட் கடை கட்டடங்களை இடிக்காமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்; வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், இரு நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.மறுபுறம் மார்க்கெட் அருகே வி.பி., தெரு பகுதியில்,'சீல்' வைத்திருந்த நகராட்சி கடையை, அவசர, அவசரமாக இடித்து கட்டும் பணியில் ஆளும் கட்சியினர் ஆதரவின் பேரில், சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த பிற வியாபாரிகள், 'தற்போதுள்ள வியாபாரிகளின் கடைகளை இதேபோல சீரமைத்து வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தி வருகின்றனர்.லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''ஏற்கனவே, மாவட்டத்தில், 283 இடங்கள் பேரிடர் பகுதிகளாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆற்றோர பகுதியான இங்கு பணிகள் மேற்கொள்வதால், புவியியல் துறை வல்லுனர்கள் நேரில் ஆய்வு செய்து, மீண்டும் இதன் உறுதி தன்மை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்றார்.

75 சதவீதம் பேர் வரவேற்பு...!

குன்னுார் கமிஷனர் இளம்பரிதி கூறியதாவது:நகராட்சி மார்க்கெட் இடித்து கட்டும் பணி விரைவில் துவங்கும். இந்த திட்டத்திற்கு, 75 சதவீதம் பேர் வரவேற்பு அளித்துள்ளனர். உள் வாடகை விட்டுள்ளவர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான்கு பிரிவுகளாக பணிகள் செயல்படுத்துவதால், முதல் பிரிவு கடைகள் மாற்றுவதற்கு அருகில் உள்ள, இந்து அறநிலைய துறை இடம் கேட்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கட்டுமான பணிக்கான மண் பரிசோதனை ஏற்கனவே நடந்துள்ளது. கட்டட அனுமதி முறையாக பெறப்பட்டுள்ளது. 'அண்டர் கிரவுண் பார்க்கிங்' திட்டத்துடன், 678 கடைகள் அமைக்கப்படும். ஆற்றோர பகுதியில் உள்ள கடைகளை இடித்து கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை