குன்னுார்:குன்னுார் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகள், 2
ஆண்டுகளாக தொடர்ந்து வருவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குன்னுார் வி.பி., தெருவில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் காட்சியளிக்கிறார். விநாயகர், ஆஞ்சநேயர் விஷ்ணு துர்க்கை, விசாலாட்சி விஸ்வநாதர் அருள்பாலிக்கின்றனர். மேலும், பைரவர், தட்சிணாமூர்த்தி நவகிரகங்கள் அமைந்துள்ளன.மேலும், விஷ்ணு துர்க்கை சன்னதியின் முன், 8அடி நீளம் 8அடி அகலமும், 10 அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்ட ஹோமகுண்டம் உள்ளது. 'எலுமிச்சை விளக்கேற்றி சிவப்பு அரளி பூவினால் அர்ச்சனை செய்வது; குழந்தை வரம் வேண்டி நெல் அரிசி வழங்குவது; வியாபாரிகள் புது கணக்கை இங்கு வந்து துவக்குவது,' என, பல்வேறு நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்துகின்றனர். இங்குள்ள வற்றாத கிணறு கோவிலுக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. ரூ. 67 லட்சத்தில் திருப்பணி
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு, 67 லட்சம் ரூபாய் ஒதுக்கி திருப்பணி துவங்கியது. அப்போது தி.மு.க., நகர செயலாளர் ராமசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில், பூஜை போடப்பட்டு திருப்பணி துவங்கப்பட்டது. அதில், முன்புற பணிகள் மற்றும் உற்சவ மூர்த்தி இடம் மட்டுமே பணிகள் நடந்துள்ளது. மேலும், 2.40 லட்சம் ரூபாய் தனியாக ஒதுக்கி இடி தாங்கி போடப்பட்டுள்ளது.தற்போதுவரை, பல லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறும் நிலையில், முக்கிய பணிகள் நடக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பணி பாதியில் நிறுத்தம்
இங்கு கருவறை எதிர்புறம் உள்ள கந்த சஷ்டிபாராயணம் நடக்கும் இடம், திருமணம் நடத்தும் இடங்களில் சிலைகள் வைக்க இரும்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் 20 பேர் மட்டுமே நிற்கும் அளவிற்கு இடமாக மாறியுள்ளது. பணிகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பக்தர்கள், அரசிடம் பல முறை தெரிவித்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் பணிகள் மீண்டும் துவக்கவில்லை. பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''இந்து அறநிலைய துறை, கோவில்களில் உள்ள உண்டியல் பணத்தை எடுத்து செல்கிறது. ''கோவிலுக்கு அருகிலுள்ள கடைகள் வீடுகளில் வரும் வாடகையை பெற்று கொள்கிறது. திருப்பணி துவங்கி ஓராண்டிற்குள் பணிகள் முடிக்க வேண்டும். ஆனால், 2 ஆண்டுகளாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை. ''பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள இரும்பு ரேடர் அகற்றப்பட்டு காணாமல் போனது குறித்தும், 67 லட்சம் செலவு செய்த விபரங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்றார்.
மூன்று மாதத்தில் பணி முடியும்...
கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் கூறுகையில், ''கோவிலில் ஒவ்வொரு பணிகள் முடிக்கப்படும் போது, நிதி தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மீண்டும் 'சென்டரிங்' வேலைகள் நடந்துள்ளதால் அதற்காக, 15 நாட்கள் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற பணிகள் நடக்க உள்ளது. 'பெயின்டிங்' வேலை உபயதாரருக்கு வழங்கப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின் பேரில் சிலைகள் வைக்க கம்பி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நிற்க பாதிப்பு ஏற்படாது. 3 மாதத்திற்குள் பணிகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.