உடல் அலர்ஜியால் கவுன்சிலர் மகன் தற்கொலை; ஜிம் பயிற்சியில் வழங்கிய ஸ்டீராய்டு புரோட்டீன் காரணமா
குன்னுார்; குன்னுார் அ.தி.மு.க., கவுன்சிலர் மகனின் உடலில் அலர்ஜி ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னுார் அட்டடி பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. அ.தி.மு.க., கவுன்சிலர். இவரது இளைய மகன் ராஜேஷ் கண்ணா,17. கோத்தகிரி தனியார் பள்ளியில், பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம், 31ம் தேதி இவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். வயிற்று பகுதியில், 50 சதவீத தீக்காயங்களுடன், கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு உயிரிழந்தார். ஸ்டராய்டு புரோட்டீன் காரணமா? இந்நிலையில், இவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று அப்பர் குன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், உறவினர்கள் மற்றும் பா.ஜ.,- அ.தி.மு.க., கட்சியினர் திரண்டனர். டி.எஸ்.பி., ரவி, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் (பொ) அவர்களின் பேச்சு வார்த்தை நடத்தினர். குரு மூர்த்தியின் சகோதரர் பால கங்காதரன் கூறுகையில்,''ராஜேஷ் கண்ணா, 2023ல் இருந்து மவுன்ட் ரோட்டில் உள்ள ஜிம்மில் பயிற்சிக்கு சென்று வந்தார். ஜிம்மில் கொடுத்த ஸ்டீராய்டு புரோட்டின் பவுடர் காரணத்தால், உடலில் அலர்ஜி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். 'சம்பந்தப்பட்ட ஜிம் பயிற்சி மைய உரிமையாளர் தான், தனது தற்கொலைக்கு காரணம்,' என, ராஜேஷ் கண்ணா கடிதம் எழுதி வைத்ததால், சம்பந்தப்பட்ட ஜிம் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளோம். ஜிம் செல்லும் இளைஞர்கள் யாரும் ஸ்டீராய்டு புரோட்டின் எடுக்க வேண்டாம்,''என்றார். டி.எஸ்.பி., ரவி கூறுகையில், ''புகாரின் அடிப்படையில், தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. புரோட்டின் பயன்படுத்தியதால் தான், உடலில் தோல் அலர்ஜி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் விசாரிக்கப்படும். இந்த புரோட்டின் எடுத்த மற்றவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா அல்லது இவர் கூடுதலாக எடுத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதன் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.